செடிகளிலேயே காய்ந்து உதிரும் தக்காளிகள்
கோடை வெயிலில் செடிகளிலேயே தக்காளிகள் காய்ந்து உதிர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நெகமம்
கோடை வெயிலில் செடிகளிலேயே தக்காளிகள் காய்ந்து உதிர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தக்காளி சாகுபடி
நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், குருநல்லிபாளையம், கோதவாடி, சேரிபாளையம், ஆண்டிபாளையம், மன்றாம்பாளையம், தேவணாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.
அதன்படி கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு மேற்கண்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. அதன்பின்னர் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து நன்கு விளைந்த தக்காளிகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரம் காட்டினர். இதனால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தக்காளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
கோடைமழை பெய்யுமா?
இந்தநிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நல்ல விளைச்சலுடன் இருக்கும் தக்காளிகள் முழு பருவம் அடைவதற்கு முன்னதாகவே செடியில் காய்ந்து விடுகிறது. மேலும் சுருங்கி வீணாக கீழே விழுந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழையை பயன்படுத்தி தக்காளி சாகுபடியில் இறங்கினோம். கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் பிஞ்சு தக்காளிகள் செடிகளிலேயே காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. மேலும் செடிகளும் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக போதிய அளவில் தக்காளிகளை விற்பனைக்கு அனுப்ப முடியவில்ைல. கோடைமழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.