தக்காளி விளைவித்து கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள்


தக்காளி விளைவித்து கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள்
x

தக்காளி விளைவித்து கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் கடந்த மாத ெதாடக்கம் வரைக்கும் தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ தக்காளி சில கடைகளில் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் திகைத்து நின்றது ஒருபுறமிருக்க, விவசாயிகள் காட்டில் பண மழை பெய்த நிலையாக இருந்தது. நாடு முழுக்க இதன் தாக்கம் இருந்த நிலையில் அப்போது தக்காளி அதிகம் அறுவடை செய்த சில விவசாயிகள் லட்சாதிபதியாக மாறிய அதிசயமும் ஏற்பட்டது. இவ்வாறு அன்று ராஜாக்கள் போல விவசாயிகள் இருந்த நிலையில் தற்போது தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் நிலை தலைகீழாக மாறியுள்ளது. குண்டடம், சூரியநல்லூர், தாராபுரம், ஜல்லிபட்டி, உடுமலை வாவிபாளையம், கொடுவாய், பொங்கலூர், பல்லடம் உள்பட திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலிருந்தும் வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி மொத்த விற்பனை விலையாக ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- எங்களுக்கு ஒரு பெட்டி தக்காளி விற்றால் ரூ.80 கிடைக்கிறது. இதில் ஒரு பெட்டிக்கு தோட்டத்தில் பறி கூலியாக ரூ.40 கொடுக்க வேண்டும். வண்டி வாடகை ஒரு பெட்டிக்கு ரூ.30, தரகு ரூ.10-க்கு மேல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அனைவருக்கும் கொடுத்து போக கூட்டி கழித்து பார்த்தால் பூஜ்யம் தான் மிஞ்சுகிறது. நாங்கள் தக்காளி விதைத்தது முதல் அறுவடை வரைக்கும் செய்த அனைத்து செலவுகளுமே நஷ்ட கணக்காகத்தான் உள்ளது. பல விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் மாடுகளை மேய விட்டுள்ளனர். இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீரை அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். உழவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற நிலையில் உள்ள விவசாயிகள் அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்ற ஏக்கப்பார்வையுடன் காத்திருக்கின்றனர்.


Related Tags :
Next Story