தக்காளி விலை குறைந்தது
தக்காளி விலை குறைந்தது
உடுமலை
ஓணம் பண்டிகை நிறைவடைந்த நிலையில் உடுமலையில் தக்காளி விலை பாதியாக குறைந்தது.
கமிஷன் மண்டிகள்
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையின் ஒருபகுதியில் காய்கறி கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கமிஷன் மண்டிகளுக்கு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகாவிற்குட்பட்டபகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும்காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் தக்காளி சாகுபடி அதிகம் உள்ளதால் இந்த கமிஷன் மண்டிகளுக்கு தக்காளி வரத்து எப்போதும் அதிகமாக இருக்கும்.அத்துடன் கொழுமம் சாலையில் ஆங்காங்கு உள்ள கமிஷன் மண்டிகளுக்கும் தக்காளி வரத்து அதிகமாக இருக்கும்.உடுமலையில் இருந்து வியாபாரிகள், காய்கறிகள் மற்றும் தக்காளி ஆகியவற்றை வாங்கி விற்பனைக்காக வெளியூர்களுக்கு கொண்டு செல்வார்கள்.பாதியளவிற்குகேரளாவிற்கும் கொண்டு செல்லப்படும்.
ஓணம் பண்டிகை
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த வாரம் தக்காளி விலை அதிகமாக இருந்தது. 14கிலோ எடைகொண்ட ஒருபெட்டி தக்காளி ரூ.500க்கு ஏலம் போனது.ஓணம் பண்டிகை முடிந்தபிறகு தக்காளி விலை குறையத்தொடங்கியது.நேற்று முன்தினம் ஒருபெட்டி தக்காளி ரூ.400வரை ஏலம் போனது. நேற்று ஆங்காங்கு வெளிப்பகுதியில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கும் வியாபாரிகள் சென்று விட்ட நிலையில், உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் உள்ள கமிஷன் மண்டிகளில், ஒருபெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை ஏலம்போனது. ஒரேநாளில் பெட்டிக்கு ரூ.150விலை குறைந்தது.
சிதறி கிடக்கும் அவலம்
அத்துடன் இந்த கமிஷன் மண்டிகளை அடுத்துள்ள காலி இடத்தில் தக்காளி ஏலம் நடைபெறும் பகுதியில், மிகவும் கனிந்த நிலையில் உள்ள மற்றும் அடிபட்ட தக்காளிபழங்கள் கழிக்கப்பட்டு ஏலம் நடைபெறும்பகுதியிலேயே சிதறிகிடக்கிறது.மழையினால் அந்த இடங்கள் ஈரமாகவும் உள்ளது.அத்துடன்அங்கு சிதறிகிடக்கும் தக்காளி பழங்களில் ஈக்கள் மொய்க்கின்றன.
தக்காளிபழங்களை கொண்டு வரும் விவசாயிகள், ஏலத்தில் கலந்து கொண்டுஅதை வாங்கிசெல்லவரும்வியாபாரிகள், அவற்றை வாகனங்களில் இருந்து இறக்கி, ஏற்றும் தொழிலாளர்கள் ஆகியோர், கீழே சிதறிகிடக்கும் தக்காளி பழங்களை மிதித்துக்கொண்டுதான் செல்லவேண்டியுள்ளது.அதனால் நோய்வரக்கூடிய அவல நிலை உள்ளது.
அதனால் அந்த பகுதியில் கழிக்கப்படும் தக்காளி பழங்களை அன்றன்றைக்கு அப்புறப்படுத்தி அந்த இடங்களை சுகாதாரமாக வைத்திருப்பது அவசியமாகும் என்றுஅந்த பகுதிக்கு வருகிறவர்கள்கருதுகின்றனர்.