தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 6 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து


தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 6 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து
x

ஒரே நாளில் சுமார் 6 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று ஒரே நாளில் சுமார் 6 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விலை சற்று குறைந்தது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதமாக இங்கு உள்ளூர் தக்காளி வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது குண்டடம், கொடுவாய், ஜல்லிப்பட்டி, சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மார்க்கெட்டிற்கு 14 முதல் 15 கிலோ எடை கொண்ட சுமார் 6 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பெட்டி தக்காளி ரூ.1550-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு பெட்டி ரூ.1300 முதல் ரூ.1400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை மும்முரம்

இதில் இரண்டாம் ரக தக்காளி ஒரு பெட்டி ரூ.900 முதல் ரூ.1200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு தக்காளியை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் விற்பனை மும்முரமாக நடந்தது. இதேபோல் பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தக்காளி விற்பனைக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் நேற்று கடைகளில் சில்லரை விற்பனையிலும் தக்காளியின் விலை குறைவாக காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.120 முதல் ரூ.130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் போது விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story