வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இதுதவிர காவல்துறை, தீயணைப்பு துறை சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். மாநகராட்சி சார்பிலும் மழைநீர் செல்ல ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், புயல் எச்சரிக்கை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் நாளை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றார்.

அதன்படி இன்றுபிற்பகலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே பிற்பகல் 2 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

பள்ளிகள் முடிந்ததும் மாணவர்கள் மகிழ்ச்சியில் சாரல் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு சென்றனர்.

பெற்றோர்கள் பலர் பள்ளி வாசலில் குடைகளுடன் நின்றுக்கொண்டு குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

சில தனியார் பள்ளிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) விடுமுறை அளித்துள்ளது.

மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story