தக்காளி, சின்ன வெங்காயம் விலை சரிவு


திருப்பூர்


திருப்பூரில் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வருவதால் இதன் விலை குறைந்துள்ளது.

வரத்து அதிகரிப்பு

தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை கடந்த மாதம் கிலோ ரூ.150 முதல் ரூ.180 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் திருப்பூரில் கடந்த ஒரு வார காலமாக இவற்றின் விலை இறங்குமுகத்தில் உள்ளது. சேவூர், ஜல்லிப்பட்டி, கொடுவாய், பல்லடம் மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உள்ளூர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் இவற்றின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைக்கும் தக்காளி வரத்து வழக்கத்தை விட அதிக அளவில் உள்ளது. இதனால் நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனையாகியது. இதேபோல், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டிற்கு 8 ஆயிரம் பெட்டி தக்காளி வந்தன.

விலை சரிவு

15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி மொத்த விற்பனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.800 முதல் ரூ.1200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.500 முதல் ரூ.700 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு விைல பெருமளவு குறைந்ததால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயத்தின் வரத்தும் அதிகமாக இருப்பதால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.70 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் பிற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளன. பீன்ஸ் ரூ.70 முதல் ரூ.80, கேரட் ரூ.70, மேரக்காய் ரூ.30, முட்டைகோஸ் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, பாகற்காய் ரூ.40, புடலை ரூ.40 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-------------


Next Story