அன்று ரூ.200...நேற்று ரூ.20...நாளை ரூ.2...?


அன்று ரூ.200...நேற்று ரூ.20...நாளை ரூ.2...?
x
திருப்பூர்


தொடர்ந்து சரிந்து வரும் தக்காளி விலையால் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்த போது ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அரசு, விலை குறையும் போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரேஷன் கடைகளில் விற்பனை

திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் இங்கிருந்து வியாபாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தக்காளி வரத்து அதிகரித்து விலை குறைவால் விவசாயிகள் தவிக்கும் நிலையே ஏற்பட்டு வருகிறது. இதனால் தக்காளியை ரோட்டில் கொட்டியும், விளைநிலங்களில் உழவு ஓட்டி அழித்தும் விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.ஆனால் கடந்த மாதம் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானது. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியதுடன், தக்காளியை அதிக விலைக்கு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு பண்ணை பசுமைக் கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் மளமளவென்று விலை குறையத் தொடங்கியது. ஆனால் கேரளாவின் புகழ் பெற்ற ஓணம் பண்டிகைக்கு தேவை அதிகம் இருந்ததால் ஓரளவு கட்டுப்படியாகும் விலை கிடைத்து வந்தது. தற்போது ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் விலை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

ஆதார விலை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி விற்பனை செய்து கோடீஸ்வரரான விவசாயி பற்றி எல்லோரும் பேசிய காலம் போய் விட்டது. தற்போது தக்காளி விற்று விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு போகும் விவசாயிகளை பார்க்கும் காலம் வந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரையிலே விற்பனையானது. இதனால் மண்டி கமிஷன், வண்டி வாடகை கழித்து பறி கூலிக்கு விவசாயிகள் கையிலிருந்தே காசு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்றபோது பெரும்பாலான விவசாயிகளிடம் தக்காளியே இல்லை. தக்காளி இருக்கும் போது விலை இல்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் .நாயைக் கண்டால் கல்லைக்காணோம் என்ற நிலையிலேயே விவசாயிகள் உள்ளனர்.

எனவே ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி ஜாம், சாஸ், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தி, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு வசதி உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஒரு கிலோ ரூ.200 லிருந்து ரூ.20 ஆக குறைந்ததோடு நில்லாமல் ரூ.2-க்கு விற்க வேண்டிய அவலம் ஏற்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை அவசியமாகும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story