தக்காளி சட்னி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்


தக்காளி சட்னி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 16 July 2023 10:37 PM IST (Updated: 17 July 2023 2:44 PM IST)
t-max-icont-min-icon

கடுமையான விலை உயர்வு எதிரொலி காரணமாக திருப்பூரில் ஓட்டல்கள், தள்ளுவண்டி உணவக கடைகளில் தக்காளி சட்னி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

திருப்பூர்

தக்காளி விலை உயர்வு

நாம் அன்றாடம் சாப்பிடும் பெரும்பாலான உணவு வகைகளில் தக்காளி என்பது ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு தக்காளி உணவு பொருட்களின் சுவையை கூட்டி தருவதாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு தக்காளி இருந்தால்தான் சமையல் கலையே வரும் என்று கூட சொல்லலாம்.

ஒரு சில நேரங்களில் அதிக விளைச்சல் காரணமாகவும், விலை கிடைக்காததாலும் சில இடங்களில் விவசாயிகள் தக்காளியை கூடை, கூடையாக குப்பையில் கொட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மீம்ஸ்கள்

இந்த விலை உயர்வு என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. ஒருசில இடங்களில் குடும்பங்களில் தக்காளி விலை உயர்வு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே பெரும் பிரச்சினை கூட ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு தக்காளி விலை உயர்வு தொடர்பாக மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

திருப்பூரில் 1 கிலோ ரூ.20 அல்லது ரூ.30-ஆக இருந்த தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.130-ஆக கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இட்லி, தோசை, பரோட்டா உள்ளிட்ட டிபன் வகைகளுக்கு தேங்காய் சட்னி, சாம்பாருக்கு அடுத்தபடியாக தக்காளி சட்னியை கேட்டு வாங்கி, விரும்பி சாப்பிடுவது வழக்கம்.

தக்காளி சட்னி இல்லை

ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்வு காரணமாக ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்களில் தக்காளி சட்னி கொடுப்பதை நிறுத்தி உள்ளனர். சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல தக்காளி சட்னி கொடுங்க என்று கேட்கும்போது, விக்குற விலைக்கு தக்காளி சட்னி கேக்குறீங்களே பாஸ் என்று ஆதங்கத்துடனும், சோகத்துடனும் சொல்வதை பார்க்க முடிகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடனேயே சாப்பிட்டு செல்கின்றனர்.

ஒருசில கடைகளில் தக்காளி சட்னி இல்லை என்று அட்டையில் எழுதியும் போட்டுள்ளனர். தக்காளி விலை உயர்வு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதுதான் அனைவராலும் உணர முடிகிறது. எனவே தக்காளி விலை உயர்வை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் என அனைவரது எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.


Next Story