சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை
கோபால்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தென்னை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
திண்டுக்கல்
கோபால்பட்டி அருகே உள்ள கன்னியாபுரத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென கார்மேகம் சூழ்ந்து கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் ½ மணி நேரம் நீடித்த மழையின்போது, சூறைக்காற்று சுழன்று அடித்தது. இதில் அப்பகுதியில் உள்ள தோப்புகளில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பல்வேறு வகை மரங்கள் முறிந்து விழுந்தன. சில தென்னை மரங்கள், மின்சார வயர்கள் மீது விழுந்தது. இதில் பாரம் தாங்க முடியாமல் மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் வயர்கள் மீது விழுந்த மரங்களை அகற்றினர். அதன்பிறகு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story