ஒரே கூண்டில் 70-க்கும் மேற்பட்ட குரங்குகளை அடைத்து சித்ரவதையா? வனத்துறை விளக்கம்


ஒரே கூண்டில் 70-க்கும் மேற்பட்ட குரங்குகளை அடைத்து சித்ரவதையா? வனத்துறை விளக்கம்
x

அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் ஒரே கூண்டில் 70-க்கும் மேற்பட்ட குரங்குகளை அடைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. அதற்கு வனத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பேரூராட்சிக்கும், வனத்துறைக்கும் புகார்கள் வந்தன.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகமும், அச்சரப்பாக்கம் கோட்ட வனத்துறையும் இணைந்து பேரூராட்சிக்கு வெங்கடேசபுரம் காந்தி நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூண்டுகள் அமைத்து குரங்குகளை பிடித்தனர்.

முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில் ஒரு கூண்டில் எந்த குரங்கும் சிக்கவில்லை. 2-வது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3-வது கூண்டில் 20-க் கும் மேற்பட்ட குரங்குகளும் அடைபட்டன. 2-வது நாள் 26 குரங்குகள் பிடிபட்டன.

சித்ரவதையா?

இந்தநிலையில் ஒரே கூண்டில் 70-க்கும் அதிகமான குரங்குகளை வனத்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இதற்கு வனத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. 3 கூண்டுகள் வைத்தும் ஒரு கூண்டில் எந்த குரங்குகளும் சிக்காததும், ஒரே கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி உள்ளதே? என்று வனத்துறையினரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-

குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும். 70 குரங்குகள் வரை ஒரே குடும்பாக வசிக்கும். நாங்கள் வைத்த கூண்டில் ஒரே குடும்பத்திலுள்ள குரங்குகள் குழுவாக கூண்டுக்குள் செல்லும்போது இவ்வாறு சிக்குவது உண்டு. அப்படிதான் சிக்கி இருந்தது. சித்ரவதை செய்யவில்லை. ஒரே கூண்டில் பிடிபிட்ட குரங்குகளை தனியாக பிரித்து மற்றொரு கூண்டுகளில் அடைத்து அனைத்தையும் வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story