உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு பள்ளி விடுதி மாணவிகளின் விழிப்புணர்வு சுற்றுலா-கலெக்டர் பழனி வாழ்த்தி அனுப்பி வைத்தார்


உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு பள்ளி விடுதி மாணவிகளின் விழிப்புணர்வு சுற்றுலா-கலெக்டர் பழனி வாழ்த்தி அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சுற்றுலா மேற்கொண்ட பள்ளி விடுதி மாணவிகளை கலெக்டர் பழனி வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

விழுப்புரம்

விழிப்புணர்வு சுற்றுலா

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு பள்ளி விடுதி மாணவிகள், ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்கள் சுற்றுலா புறப்பட்ட வாகனத்தை மாவட்ட கலெக்டர் பழனி, கொடியசைத்து தொடங்கி வைத்து அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது:-

செஞ்சிக்கோட்டை

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், மாவட்டத்தின் வரலாறு மற்றும் சிறப்புகளை தெரிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி விடுதி மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவந்தாடு ஆதிதிராவிட நல விடுதி மாணவிகள் 50 பேர் சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதி, மதிய உணவு, தமிழ்நாடு வரைபடம், விழுப்புரம் மாவட்ட கையேடு போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா மூலம் பள்ளி விடுதி மாணவிகளுக்கு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், கல்மரப்பூங்கா, மயிலம் முருகன் கோவில் மற்றும் செஞ்சிக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகள் சுற்றிக்காட்டப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவிகள் மகிழ்ச்சி

இதையடுத்து மாணவிகள் கூறுகையில், பாடப்புத்தகங்களில் அறிந்துகொண்ட தகவல்களை இன்றைய தின விழிப்புணர்வு சுற்றுலா மூலம் திருவக்கரை கல்மரப்பூங்கா, செஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை அறிந்துகொள்வோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, விடுதி காப்பாளர் ஜோதி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story