சுற்றுலா தின கலைநிகழ்ச்சி
தஞ்சையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன
தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை பணி நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இதில் தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், ஒரத்தநாடு கால்நடை கல்லூரி, ஈச்சங்கோட்டை விவசாய கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி மற்றும் ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.
தலையாட்டி பொம்மை
நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை அரண்மனை வளாகத்தை சென்றடைந்தது. பின்னர் மராட்டா தர்பார் மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய நடைபயணம் நடைபெற்றது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை புரிந்த வெளிநாட்டு பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்தார். இதில் சுற்றுலாத்துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, தாசில்தார் மணிகண்டன், சுற்றுலா தகவல் அலுவலர் ராஜ்குமார், இண்டாக் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சையில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதன் நிறைவாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கலாசார திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. தஞ்சை, திருச்சி, தேனி, தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 குழுவை சேர்ந்த 125 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் நாட்டுப்புறக்கலைகளான கொம்பு, நையாண்டி மேளம், புலி ஆட்டம், கும்மி கோலாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம், பம்பை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், காளியாட்டம், தப்பாட்டம்,சிலம்பாட்டம் மற்றும் துடும்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.இதில் துடும்பாட்டத்தை கோவையை சேர்ந்த கலைஞர்கள் சார்பில் நடைபெற்றது. இந்த குழுவினரின் இசை தற்போது வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கலைவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இந்த கலைவிழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்திய சுற்றுலா தென்மண்டல இயக்குனர் முகமதுபாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.