திருத்தணியில் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் சுற்றுலா மாளிகை; சீரமைத்து மீண்டும் திறக்க கோரிக்கை


திருத்தணியில் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் சுற்றுலா மாளிகை; சீரமைத்து மீண்டும் திறக்க கோரிக்கை
x

திருத்தணியில் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் சுற்றுலா மாளிகை பல ஆண்டுகளாக மூடி கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்

முதல்-அமைச்சர், கவர்னர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், வெளியூர்களுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்லும்போது அவர்கள் தங்குவதற்காக ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் அரசு சுற்றுலா மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தச் சுற்றுலா மாளிகைகளில் படுக்கை அறை வசதி கொண்ட குளிர்சாதன அறைகளும், சாதாரண அறைகளும் உள்ளன.

இந்நிலையில் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிநாதபுரம் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் சுற்றுலா மாளிகை கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 5 அறைகள் உள்ளன. இந்த சுற்றுலா மாளிகை பொதுப்பணி துறை பராமரிப்பில் உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா மாளிகை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கட்டிடங்கள் சேதமடைந்து விரிசல் காணப்படுகிறது. மேலும் கட்டிடங்களை சுற்றி முற்செடிகள் வளர்ந்து உள்ளது.

இதனால் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை பல ஆண்டுகளாக மூடி கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள சுற்றுலா மாளிகையை சீரமைத்து விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story