சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. ேமலும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.
வால்பாறை
வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. ேமலும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.
கடும் வெயில்
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை கோடைகாலம் இருக்கும். இந்த கோடைகாலத்தில் கடுமையான வெயில் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விடும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்திலேயே இரவில் கடுங்குளிரும், பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வருகிறது. இதனால் வால்பாறை பகுதி மக்கள் இரவில் குளிரை தாங்கி கொண்டாலும், பகலில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் தவித்து வருகின்றனர். மேலும் தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி, கொசு போன்றவை தாக்க தொடங்கி விட்டன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூழாங்கல் ஆறு
இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு பிப்ரவரி மாதம் இறுதி வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை இருந்து இருக்கும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் பள்ளி தேர்வுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறையும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கடுமையான வெயில் வாட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.
அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய ஒரே இடம் குளித்து மகிழும் வசதி கொண்ட கூழாங்கல் ஆற்று பகுதி மட்டுமே. ஆனால் அங்கு கூட கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.