வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த 4 நாட்களாக விட்டு, விட்டு கனமழை பெய்து வந்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதைதொடர்ந்து வால்பாறை பகுதியில் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர். 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்யவில்லை. லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டி 162 அடியாக உள்ளது. 2 மின் நிலையங்களும் தொடர்ந்து இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேடல்பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. இரவில் கடுங்குளிரும், பனிமூட்டமும் நிலவுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. இதனால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story