முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருப்பூர்

தளி

அமராவதி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

முதலை பண்ணை

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் 22 ஆண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது விலங்குகளின் சிலைகள், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, ஓவியம், புல்தரை, வனவிலங்குகளின் சிலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதனால் முதலைப்பண்ணை புதுபொழிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று அமராவதிஅணை பகுதியில் சுற்றுலாபயணிகள் குவிந்தனர். பின்னர் அணைப்பகுதி, ஒன்பது கண் மதகுகள் முன்பு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து முதலைப்பண்ணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் முதலைகளை பார்த்து ரசித்தனர். புதிதாக பிறந்துள்ள முதலை குட்டிகள் அங்கும் இங்கும் ஓடிப் பிடித்து விளையாடியது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து அங்குள்ள வனவிலங்குகளின் சிலைக்கு முன்பு புகைப்படம் எடுத்ததுடன் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவற்றில் விளையாடினர். இதனால் அணைப்பகுதி, ராக் கார்டன், முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பராமரிப்பு

ஆனால் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். இதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி விட்டு திரும்பி சென்றனர். இதனால் திருமூர்த்தி அணை அங்கிருந்து அருவி கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.



Next Story