சுற்றுலா சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண் பலி
மதுராந்தகம் அருகே சுற்றுலா சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,20 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே காஞ்சிபுரம், சென்னை மற்றும் அதன் சுற்றுபுறபகுதியை சேர்ந்த குடும்பத்தினர் 53 பேர் தனியார் சொகுசு பேருந்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்பட பல இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு 4 நாட்கள் சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேலவளம்பேட்டை என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 53 பேரில் 20 க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்தனர்.இதில் நாதிஷா (வயது 50) என்ற பெண் மட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.