ஊட்டியில் சுற்றுலா வாகன ஓட்டிகள் வேலைநிறுத்தம்
வெளியூர் கார்களை நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இயக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஊட்டியில் சுற்றுலா வாகன ஓட்டிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
வெளியூர் கார்களை நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இயக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஊட்டியில் சுற்றுலா வாகன ஓட்டிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடையாள வேலைநிறுத்தம்
நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டிகள் உள்ளனர். இவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வது, தங்கும் விடுதிகளுக்கு அழைத்து செல்வது போன்றவற்றின் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக முன்பதிவு மூலம் வெளியூர் வாடகை கார்களில் நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கார்களில் தலங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் நேற்று வெளியூர் வாடகை கார்களை சுற்றுலா தலங்களில் இயக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நீலகிரி அனைத்து சுற்றுலா வாகன ஓட்டிகள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
இதன் காரணமாக அவர்கள் வாகனங்கள், மேக்சிகேப்புகளை ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க 4 பேர் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறும்போது, வெளியிடங்களில் இருந்து வரும் வாடகை கார் டிரைவர்கள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க போதிய முன்அனுபவம் இல்லை. அவர்கள் சுற்றுலா பயணிகளை ஊட்டியில் இறக்கி விடுவதற்கு பதிலாக, சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு கொடுத்தனர்.