சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்


சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2023 10:00 PM GMT (Updated: 7 Aug 2023 10:00 PM GMT)

நீலகிரியில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் 2,000-த்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் மாவட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் சார்பில், மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஊட்டியில் நடந்த போராட்டத்திற்கு தலைவர் கோவர்த்தனன் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஆட்டோக்கள் அதிக தூரம் இயக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் டாக்சிகள் சமவெளி பகுதிகளில் இருந்து பேக்கேஜ் முறையில் சுற்றுலா பயணிகளை ஊட்டிக்கு அழைத்து வந்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

வாடகை பயன்பாடு

சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். சுற்றுலா வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் போலீசார் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகன டிரைவர்கள் பல்வேறு மனுக்களை ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வழங்கிய போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். வேலைநிறுத்தம் காரணமாக சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு போதிய வாகனங்கள் கிடைக்காததால், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.


Next Story