நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு:ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வார விடுமுறையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி அம்மாநில அரசு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.