மனதை மயக்கும் மன்னவனூரில் சுற்றுலா பயணிகளை கவரும் கம்பளி ஆடுகள்

மனதை மயக்கும் மன்னவனூரில் கம்பளி ஆடுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் மன்னவனூர் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழல் சுற்றுலா மையமான மன்னவனூர், சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் சிறந்த சுற்றுலாதலம் ஆகி விட்டது. மத்திய அரசின், தென்மண்டல பாரத் மெரினோ என்ற கம்பளிகளுக்காக வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் முயல்கள் ஆராய்ச்சி நிலையம் மன்னவனூரில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆடுகள் ரோமத்துக்காகவும், முயல்கள் விற்பனைக்காகவும் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஆடுகள், முயல்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பார்வையிட, சுற்றுலா பயணிகள் தினமும் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மன்னவனூரில் வளர்க்கப்படும் ஆடுகள், முயல் வகைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். அடர்ந்து படர்ந்த புல்வெளியில் ஆடுகள் மேயும் காட்சி, சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுது போக்கு அம்சமாக உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடு, முயல் வளர்ப்பு குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இந்த வானிலையை அங்குள்ள புல்வெளியில் அமர்ந்தபடி அனுபவித்து வருகின்றனர். மேலும் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மன்னவனூர் ஏரியை சுற்றுலா பயணிகள் ரசித்த வண்ணம் உள்ளனர். அங்கு பரிசல் சவாரி களை கட்டுகிறது. இதேபோல் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிப்லைன் சாகசத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






