வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழை- திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை ரசித்த சுற்றுலா பயணிகள்


வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழை- திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
x

வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கன மழை

வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து புயல் மழையும், அதனை தொடர்ந்து கோடைமழையும் பெய்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வால்பாறை வட்டார பகுதி முழுவதும் இரவு மற்றும் பகல் நேரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு சோலையாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 111 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருப்பதால் இந்த ஆண்டு சோலையாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓரிரு நாட்களில் சோலையாறு மின் நிலையங்கள் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

திடீர் நீர்வீழ்ச்சிகள்

இந்த நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் நேற்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கண மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் ஆங்காங்கே புதிது புதிதாக நீர் வீழ்ச்சிகள் தோண்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக- கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக்கூடிய அதிரப்பள்ளி மற்றும் சார்ப்பா நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதேபோல் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் வனப்பகுதியில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ேதாண்றி உள்ளது. இந்த திடீர் நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

நெகமம் பகுதியில் மிதமான மழை

நெகமம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில், நேற்று மதியம் முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் குளிரான காலநிலை நிலவியது. இதேபோல் வடசித்தூர், காட்டம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மதியம் 3 மணி முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் வாகன ஓட்டிகள் குடை பிடித்த சென்றதை காணமுடிந்தது.


Next Story