பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பராமரிப்பதில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்


பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பராமரிப்பதில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
x

பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பாரமரிப்பதில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பாரமரிப்பதில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

நகராட்சி சாதாரண கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாதாள சாக்கடை மூடி சீரமைத்தல், மாட்டு சந்தையில் வசதிகள் ஏற்படுத்துதல் உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவுன்சிலர் செந்தில்:- 36-வது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கடந்த மாதம் கடிதம் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பதில்லை.

கவுன்சிலர் சாந்தி கிருஷ்ணகுமார்:- வடுகபாளையம் நூலகத்தில் மாத இதழ்கள் போடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களை பணி மாற்றம் செய்வதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களை எந்த சுகாதார அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை. வார்டில் நடக்கும் பணிகள் குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை.

தீர்மானத்துக்கு ஆட்சேபணை

கவுன்சிலர் பெருமாள்:- மாட்டு சந்தையில் வசதிகளை மேம்படுத்தினால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் எம்.ஜி. நகரில் சாலை மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா:- பொதுக்கழிப்பிடம், சமுதாய கழிப்பிடம் கட்டுவதற்கு ஒப்பந்தப்பட்டியல் தொடர்பான 20, 21, 22 ஆகிய தீர்மானங்களுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இந்த தீர்மானங்கள் மீதான ஆட்சபணையை கடிதம் மூலம் கொடுக்கிறோம்.

கவுன்சிலர் துரைபாய்: குமரன் நகர் பகுதியில் எனது வார்டில் 1556 வீடுகள் உள்ளது. ஆனால் 3 தூய்மை பணியாளர்கள் தான் உள்ளனர். இதற்கிடையில் குப்பைகளை வாங்கும் பணிக்கு மட்டுமல்லாது, சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு மாற்றம் செய்வதால் குப்பைகளை சரிவர வாங்குவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பட்ஜெட் குறித்து வெள்ளை அறிக்கை

கவுன்சிலர் நர்மதா:-

கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. நிதி நிலை காரணம் என்றால், அது சரியான பிறகு பெரிய திட்டங்களை அறிவிக்கலாம். அடுத்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? என்றார்.

துணை தலைவர் கவுதமன்:- 35-வது வார்டில் கடந்த 27-ந்தேதிக்குள் தெருவிளக்குகள் அனைத்தும் எரியும் என்று ஒப்பந்ததாரர் கூறினார்கள். ஆனால் இதுவரைக்கும் அந்த பணிகளை சரிவர செய்யவில்லை. எத்தனை நாட்களில் பணிகளை செய்வார்கள். ஆட்களை அதிகப்படுத்தி தெருவிளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும். கடந்த காலங்களை போன்று நகராட்சி மன்ற கூட்டங்களில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்த அதிகாரிகள்:- நகராட்சி பகுதிகளில் 3600 தெருவிளக்குகள் உள்ளன. இதில் 350 விளக்குகள் தான் எரியவில்லை. நகராட்சியில் ரூ.58 லட்சம் பாக்கி உள்ளது. இருப்பினும் பணிகளை செய்து வருகிறோம். கூடுதலாக ஆட்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தெருவிளக்குகள் பராமரிப்பு

ஆணையாளர் தாணுமூர்த்தி:- இதுவரைக்கும் தெருவிளக்கு ஒப்பந்தம் எடுத்த அதிகாரிகள் யாரும் என்னை பார்க்கவில்லை. ஒப்பந்தப்படி சரியாக பணிகளை செய்யவில்லை என்றால் எழுதி கொடுங்கள் ரத்து செய்கிறோம். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜோதி நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- மாத கணக்கில் தெருவிளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 2 வாகனங்களை ஏற்பாடு செய்து அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க வேண்டும். மேலும் தினமும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வரி வசூலாகி நிதி நிலை சீரானதும் சிறு பாலம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். பார்வையாளர்களை மன்ற கூட்டத்தில் அனுமதிப்பதில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதாள சாக்கடை பணிக்கு அமைக்கப்பட்ட மூடிகள் மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் சீரமைக்கப்படுகிறது.


Next Story