கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிக்ள செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரி பகுதிக்கு செல்லும் வழியில் மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி வியூ, தொப்பி தூக்கிபாறை உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்களுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
அடர்ந்து படர்ந்த வனப்பகுதியான இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன்காரணமாக அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பேரிஜம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் நேற்று காலையில் இடம்பெயர்ந்து இருப்பதாக வனத்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து நேற்று காலை முதல் மீண்டும் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரியும் கருமந்திகளுடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.