பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால், பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
கொடைக்கானலில் உள்ள சிறந்த சுற்றுலா இடங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்றாகும். ஏரிக்கு செல்லும் வழியில் மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம்ஏரி வியூ, தொப்பி தூக்கிபாறை உள்ளிட்ட எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்களும் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், வனத்துறையினரின் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் 4 காட்டு யானைகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் முகாமிட்டு இருந்தன. இதன் காரணமாக பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்ததாக வனத்துறை ஊழியர்கள் மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை முதல் மீண்டும் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதோ, செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். இதைத்ெதாடர்ந்து காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி பேரிஜம் ஏரிக்கு சென்றனர்.