ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனை திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனை திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x

ஓணம் பண்டிகை தினத்தன்று பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

ஓணம் பண்டிகை தினத்தன்று பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பத்மநாபபுரம் அரண்மனை

தக்கலைக்கு அருகே உள்ள பத்மநாபபுரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் ஆட்சி புரிந்த பிரமாண்ட அரண்மனை உள்ளது. சுமார் 470 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அரண்மனையை கேரள மாநில அரசின் தொல்லியல் ஆய்வு துறை பராமரித்து வருகிறது.

இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு அரசு விழாவாக கொண்டாடப்படும் ஓண விழா அரண்மனையிலும் 10 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். அத்தம் தொடங்கும் நாளில் அரண்மனையின் முற்றத்தில் அத்தப்பூ கோலமிட்டு குத்து விளக்கு ஏற்றி ஓணவிழா தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சியை கேரள மாநில தொல்லியல் ஆய்வு துறை அதிகாரிகள் தொடங்கி வைப்பார்கள்.

அதைத்தொடர்ந்து 10 நாட்கள் தினமும் ஊழியர்கள் அத்தப் பூ கோலமிடுவார்கள், அது போல் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள், ஊழியர்கள் ஆடிபாடி மகிழ்விப்பதற்காக பெரிய உஞ்சல் கட்டப்பட்டிருக்கும். மேலும் ஓணத்திற்கு முந்தைய நாள் முக்கிய பிரமுகர்கள், ஊழியர்களுக்கு ஓண சத்யா என்ற அறுசுவை உணவு விருந்தளிப்பார்கள். மேலும், ஓணம் பண்டிகைக்கு முந்தைய 3 நாட்கள் அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும். அரண்மனைக்கு விடுமுறை என்றாலும் கூட அரண்மனை முன்வாசல் காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும். இதனால் அரண்மனையை காணவரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் குழந்தைகளோடு ஊஞ்சலில் ஆடி மகிழ்வார்கள். அது போல் இரவில் மின் விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் அரண்மனையின் அழகை கண்டு ரசிப்பார்கள்,

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த ஆண்டு அரண்மனையில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா காலகட்டத்தை தவிர்த்து மற்ற அனைத்து ஆண்டுகளிலும் நடத்தப்பட்டு வந்த இந்த பாரம்பரிய ஓண விழா எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக ஓணத்தன்று அரண்மனைக்கு விடுமுறை என்றாலும் முன்வாசல் திறந்திருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று அரண்மனையின் முன்அழகை ரசிப்பதோடு ஊஞ்சலில் ஆடி சிறிது நேரம் மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்து செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அரண்மனை கதவு பூட்டப்பட்டிருந்ததால் அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story