படகுசவாரி, பாராகிளைடரில் பறந்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்


தினத்தந்தி 28 May 2023 12:45 AM IST (Updated: 28 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 2-வது நாளாக கோடை விழா நடைபெற்றது. இதில் படகுசவாரி, பாரா கிளைடரில் பறந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பரதநாட்டியம், தப்பாட்டம் கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

கோயம்புத்தூர்


வால்பாறையில் 2-வது நாளாக கோடை விழா நடைபெற்றது. இதில் படகுசவாரி, பாரா கிளைடரில் பறந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பரதநாட்டியம், தப்பாட்டம் கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

கோடை விழா

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் வால்பாறையில் கோடை விழா நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. விழாவை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தொடங்கி வைத்தார்.

நகராட்சி ஆணையாளர் பொ.வெங்கடாசலம், நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவிகளின் பரத நாட்டியம், கலைஞர்களின் தப்பாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் வால்பாறை பகுதியை சேர்ந்தவர்களின் வளர்ப்பு நாய்களின் கண்காட்சி தமிழ் நாடு கால்நடை பராமரிப்பு துறையினரால் நடத்தப்பட்டது. இதில் 21 நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தது.

பாராகிளைடர்

அதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதா னத்தில் பாராகிளைடரில் பறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் பாராகிளைடரில் பறந்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடை விழாவை கொண்டாட தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வால்பாறைக்கு வந்திருந்தனர்.

படகு சவாரி

வால்பாறை நகராட்சி படகு இல்லம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருந்தது.

கோடைவிழாவையொட்டி நகராட்சி படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து சப்- கலெக்டர் பிரியங்கா, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கோடைவிழாவின் 2- வது நாளில் நாட்டிய நடன நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, இன்னிசை, உள்ளூர்வாசிகளின் மேடை நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் மதியம் 2.30 மணியில் இருந்து பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மதியம் நடைபெற வேண்டிய கோடை விழா நிகழ்ச்சிகள் தடைபட்டது. ஆனாலும் வால்பாறை யில் நிலவிய இயற்கையான சூழலை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.


Next Story