சாலை விரிவாக்க பணியில் இருந்து தப்பிய பூஞ்சேரி பாறைக்குன்று கல்வெட்டை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்


சாலை விரிவாக்க பணியில் இருந்து தப்பிய பூஞ்சேரி பாறைக்குன்று கல்வெட்டை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் வைத்த கோரிக்கையால் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணியில் இருந்து அகற்றப்படாமல் தப்பிய பூஞ்சேரி பாறைக்குன்று கல்வெட்டு பகுதியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

சாலை வரிவாக்க பணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி பாதையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு அதில் உள்ள குடியிருப்புகள, கடைகள் அகற்றப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள பல்லவர் கால பாறைக்குன்று கல்வெட்டு பகுதியை மாமல்லபுரம் தொல்லியல் துறையினர் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் இந்த பாறைக்குன்று கல்வெட்டு பகுதி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணியில் அகற்றப்பட உள்ளதாக தகவல் பரவியது.

பாறைக்குன்று கல்வெட்டு

இதையடுத்து பல்லவர் கால கல்வெட்டு தகவல்களை சேகரிக்க மாமல்லபுரம் வந்த வரலாற்று ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இந்த பாறைக்குன்று கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றி அறிந்து இதனை சாலை விரிவாக்க பணியின் போது அகற்ற கூடாது என்றும், இதனை அகற்றாமல் மாற்று வழியில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனையடுத்து இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்த அதிகாரிகள் தெற்கு திசையில் உள்ள இந்த கல்வெட்டு பகுதியை அகற்றாமல், வடக்கு திசை வழியாக சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணியில் இருந்து பல்லவர் கால பாறைக்குன்று கல்வெட்டு பகுதி தப்பியதால் சுற்றுலா பயணிகள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

முட்செடிகள், புதர்கள் சூழ்ந்து காணப்பட்ட இந்த பகுதியை பார்வையாளர்கள் வருகைக்காக தொல்லியல் துறையினர் சுத்தம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடையே பூஞ்சேரி பல்லவர் கால பாறைக்குன்று கல்வெட்டை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் குழு, குழுவாக வரும் பயணிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பூஞ்சேரி பகுதிக்கு சுற்றுலா வழிகாட்டிகளுடன் சென்று இதனை கண்டுகளித்துவிட்டு செல்வதை காண முடிகிறது.


Next Story