பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை


பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்றாகும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பாா்த்து ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் குட்டியுடன் 4 காட்டு யானைகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் முகாமிட்டுள்ளதை சுற்றுலா பயணிகள் பாா்த்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் தலைமையில் வனவர் அழகுராஜா மற்றும் ஊழியர்கள் வாகனத்தில் யானையின் நடமாட்டத்தை பார்வையிட சென்றனர். அப்போது பேரிஜம் ஏரி வியூ என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த யானை கூட்டத்தை கண்டு அவர்கள் பார்த்தனர். இதனையடுத்து வனத்துறையினர் தங்களது வாகனத்தை திருப்பி கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், யானைகள் சாலையோரங்களில் நடமாடி வருகின்றன. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்ற பின்னர் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.


Next Story