தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளதால், நாளை மறுநாள் முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளதால், நாளை மறுநாள் முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தொட்டபெட்டா மலைச்சிகரம்
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம். இந்த மலைச்சிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம். தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தினமும் 7 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.
அனுமதி இல்லை
உயரமான மலைச்சிகரத்தில் நின்றபடி இயற்கை காட்சிகளின் பின்னணியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்வது வழக்கம். அங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல 3 நாட்கள் தடை விதித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் வனத்துறை மூலம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, பணி காரணமாக 3 நாட்கள் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.