கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்-எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்
கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கேத்தரின் நீர்வீழ்ச்சி
கோத்தகிரி, அரவேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி குஞ்சப்பனை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிரதான நீர் வீழ்ச்சியை தொலைவில் இருந்து கண்டு களிப்பதற்காக கண்காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சியை காண்பதுடன் மேட்டுப்பாளையம், தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள மட்டுமின்றி குன்னூர் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனையையும் கண்டுகளிக்க முடியும். இந்த காட்சி முனை கோபுரம் பகுதியில் பாதுகாப்பு தடுப்புக் குழாய்கள் அமைக்கப்பட்டு இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் தடுப்புகளை தாண்டிச் சென்று பாறைகளின் விளிம்பில் நின்று ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
மது அருந்தும் இளைஞர்கள்
இதே போல இந்த அருவிக்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள துணை அருவிக்கு நடந்துச் செல்லும் இளைஞர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தி விட்டு அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதே போல ஏற்கனேவே இந்த அருவி நீரில் குளிக்க சென்று இங்குள்ள சுழல்களில் சிக்கி ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அருவிகளில் குளிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள வழுக்கும் பாறைகளில் செல்லும் போது வழுக்கி விழுந்து காயமடைவது வாடிக்கையாகி வருகிறது.
உரிய நடவடிக்கை
எனவே இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு செல்வதைத் தடுக்க ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.