படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கல்வராயன்மலையில் பல மாதங்களுக்குப்பிறகு படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கச்சிராயப்பாளையம்
ஏழைகளின் சுற்றுலாதலமான கல்வராயன்மலையில் பெரியார், மேகம், கவியம் என 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள், படகு குளாம், சிறுவர் பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் நீர் வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்வதோடு, படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்த படகு குழாமில் உள்ள படகுகள் தொடர்ந்து பெய்த கன மழையால் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பழுதடைந்த படகுகளை சரிசெய்து மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பழுதடைந்த படகுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டதை அடுத்து பல மாதங்களுக்கு பிறகு படகு சவாரி மீண்டும் தொடங்கியது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்ததை காண முடிந்தது.