கொட்டும் மழையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்


கொட்டும் மழையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
x

கொட்டும் மழையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு கனமழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று வருகை தந்த சுற்றுலா பயணிகள் பலர் குடை பிடித்த நிலையில் வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்ததை காண முடிந்தது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு பயணிகளில் பலர் குடைபிடித்த நிலையில் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

நேற்று மாமல்லபுரத்தில் குளிர்ச்சியான, இதமான, தட்பவெப்ப சூழல் நிலவியதால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் வெண்ணை உருண்டைக்கல் முன்பு அதனை கைகளால் தாங்கி பிடிப்பது போலவும், தள்ளுவது போலவும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து ரசித்ததையும் காண முடிந்தது.

குறிப்பாக நேற்று மழையால் செல்போன் சிக்னல்கள் சரிவர இயங்காததால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட இடங்களில் கியூ-ஆர் ஸ்கேன் பார்கோடு பலகையில் பே.டி.எம். மற்றும் கூகுல்பே மூலம் ஆன்லைன் நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் பலர் பரிதவித்தனர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மாண்டஸ் புயலால் பலத்த சூறாவளி காற்று வீசியதால் மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான செல்போன் சிக்னல்களின் வயர்கள் அறுந்து செல்போன் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.

பிறகு அவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டும் தற்போது வரை இணையதள இணைப்புகள் சரிவர இயங்காமல் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் இணையதள பணபரிவர்த்தனை மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பயணிகள் பலர் தொல்லியல் துறையின் கட்டண மையங்களில் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றனர்.


Next Story