கோவை குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். அங்கு கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோவை
கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். அங்கு கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள்
கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று, கோவை குற்றாலம். அடர்ந்த வனத்திற்கு நடுவே இருப்பதால், இந்த அருவியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து, இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கடந்த 20, 21-ந் தேதிகளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 22-ந் முதல் நேற்று முன்தினம் வரை 2,500 பேர் வந்துள்ளனர்.
கழிப்பிட வசதி
இதற்கிடையில் கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என்று சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, அங்கு நுழைவு வாயில் மற்றும் அருவி அருகே சில கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக 'மொபைல் டாய்லெட்டுகள்' அமைக்க வேண்டும். மேலும் டிக்கெட் கவுண்ட்டரிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, விரைவாக டிக்கெட் வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு உள்ள மர வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி வருகிறது. மேலும் மின்தடையும் ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்றனர்.
தொங்கு பாலம்
வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், தேவைக்கு ஏற்ப மேலும் சில 'மொபைல் டாய்லெட்டுகள்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.30 லட்சம் செலவில் தொங்குபாலத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது என்றனர்.