ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமான இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
இந்தநிலையில் சனி, ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி என 3 நாட்கள் விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏலகிரி மலையில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதி நிரம்பின. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இடம் கிடைக்காததால் இரவு தங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் சுற்றுலா பயணிகள் நேற்று ஒரே நேரத்தில் மலையில் இருந்து இறங்கியதால் கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்ைத சீர் செய்தனர்.