கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு தற்போது பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நேற்றும் காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா இடங்கள் களை கட்டின.
இதையத்து வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தரை இறங்கிய மேகமூட்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். மேலும் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, குணா குகை, பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றிலும் உற்சாகமாக ஈடுபட்டனர். ஆனால் அவ்வப்போது சாரல் மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிாில் நடுங்கியபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை இயல்பான நிலையில் உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.