கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

சீசன் முடிந்தது

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில வாரங்களாக சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக சீசன் முடிந்த நிலையிலும் கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் கடந்த 3 நாட்களாக களை கட்டின.

படகு சவாரி

குறிப்பாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட இருமடங்கு அதிகரித்து இருந்தது. அங்கு ஜிப் லைன் எனப்படும் கயிறு தொங்கும் விளையாட்டு, பரிசல் சவாரி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் உற்சாகமுடன் மேற்கொண்டு பொழுதை கழித்தனர்.

மேலும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள், கொடைக்கானல் நட்சத்திர ஏரி, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நட்சத்திர ஏரியில் வழக்கத்தைவிட அதிக அளவு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகளுக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் கொடைக்கானலில் காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயிலும், அதனை தொடர்ந்து இதமான குளிரும் நிலவியது. இது கொடைக்கானலின் குளு, குளு சீசன் முடிந்துவிட்டது என்ற நினைப்பையே சுற்றுலா பயணிகளை மறக்கடிக்க செய்தது.


Next Story