கோத்தகிரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி கோத்தகிரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
கோத்தகிரி
கோடை விடுமுறையையொட்டி கோத்தகிரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள்
கோத்தகிரி பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், இங்குள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு களிக்கவும் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை, நேரு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் கோத்தகிரி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படுகிறது. மேலும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கண்டு ரசிப்பு
கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் கோடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து இருந்தது. அங்கு மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம், பசுமையான வனப்பகுதிகள், ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் நேற்று ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோத்தகிரி பகுதியில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.