மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெப்பம் வாட்டி வதைத்ததால் தவித்த சீன நாட்டு பயணிகள் சிலர் ஹெட்போன் வடிவிலான நவீன மின்விசிறியை கழுத்தில் மாட்டி கொண்டு காற்று வாங்கினர்.

செங்கல்பட்டு

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்துக்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகம் காணப்பட்டது.

நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நவீன மின்விசிறி

சீனா, தைவான் போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் சுற்றுலா வந்திருந்தனர். குளிர்பிரதேசங்களில் வசிக்கும் அவர்கள், மாமல்லபுரத்தில் வெப்பம் அதிகம் காணப்பட்டதால் சிலர் குடையை பிடித்தபடி சுற்றி பார்த்தனர்.

ஒருசிலர் ஹெட்போன் வடிவில் பேட்டரியில் இயங்கும், அதாவது முகத்திற்கு மட்டும் காற்று வீசும் ஹெட்போன் வடிவிலான நவீன மின் விசிறிகளை கழுத்தில் மாட்டி கொண்டு சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். கழுத்தில் மின்விசிறியுடன் வந்த சீன நாட்டு பயணிகளை சுற்றுலா வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர். குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் ரூ.600, உள்நாட்டு பயணிகள் ரூ.40 என நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பல மணி நேரம் வரிசையில் நின்று காத்திருந்து நுழைவு சீட்டு எடுத்து சென்றனர். பயணிகள் வருகை அதிகமிருந்ததால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.


Next Story