சுற்றுலா மையத்தில் குவிந்த பயணிகள்


சுற்றுலா மையத்தில் குவிந்த பயணிகள்
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 6:46 PM GMT)

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பயணிகள். படகு சவாாி செய்து சுரப்புன்னை காடுகளை ரசித்து சென்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சுரப்புன்னை காடுகள் உள்ளன. இந்த காடுகள் கடலும், ஆறும் சந்திக்கும் இடத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் சுரப்புன்னை காடுகளை படகுகளில் சென்று ரசிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை விடுமுறை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முன்னதாக விடுமுறையின் கடைசிநாளான நேற்று முன்தினம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பஸ், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் பகுதி மக்களும் குடும்பத்துடன் வருகை தந்ததை காண முடிந்தது.

பின்னர் இவர்கள் படகுகளில் உற்சாகத்துடன் சவாரி செய்து சுரப்புன்னை காடுகளை ரசித்து பார்த்தனர். அப்போது சிலர் சுரப்புன்னை காடுகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் கடல் கன்னி முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயணிகள் வருகையால் பிச்சாவரம் சுற்றுலா மையம் பரபரப்புடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா மையம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேலாளர் தினேஷ் குமார் செய்திருந்தார்.


Next Story