கோடை விடுமுறை 'களை' கட்டியதுதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறை களை கட்டியதுதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை விடுமுறை ‘களை’ கட்டியதால், திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

கோடை விடுமுறை 'களை' கட்டியதால், திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து குளித்து விட்டு செல்வார்கள்.. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் திற்பரப்பு அருவி காலையில் இருந்தே 'களை' கட்டியது. அருவியில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த 3 நாட்களாக மலையோரப்பகுதிகளில் மழை பெய்யாவிட்டாலும், கோதையாற்றில் பரவலாக தண்ணீர் பாய்கிறது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது.

போக்குவரத்து நெருக்கடி

திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தவர்கள் எதிரே உள்ள நீச்சல் குளத்திலும் குளித்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையை அனுபவித்தனர். மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் அருவி ஜங்ஷனில் இருந்து வெகு தூரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது. சில நேரங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

பின்னர் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தொட்டி பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

பின்னர் தொட்டிப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஓடும் பரளியாற்றில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் பத்மநாபபுரம் அரண்மனை, புலியூர் குறிச்சி உதயகிரி கோட்டையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story