வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
வால்பாறை
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
ஓணம் விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் பச்சை பசேலன காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி அங்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேற்று முதல் வருகிற 4-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வால்பாறையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்ததை காணமுடிந்தது.
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து உணவு சாப்பிட்டனர். தேயிலை தோட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என்பதால், வால்பாறையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறத்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறையின் காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு ஆணை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதிய வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.