வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சின்னக்கல்லார் ஆற்றின் குறுக்கே உள்ள தூரிப்பாலத்தில் நடந்து மகிழந்தனர்.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சின்னக்கல்லார் ஆற்றின் குறுக்கே உள்ள தூரிப்பாலத்தில் நடந்து மகிழந்தனர்.
வனத்துறையினர் அனுமதி
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மலைப்பிரதேசமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மே மாதம் தினமும் ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் 1,500 பேர் முதல் 2,500 பேர் வரை வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளை ஒட்டியுள்ள இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கூழாங்கல் ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். 2 ஆண்டுக்கு பிறகு சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அங்கு ஒரு நபருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
இருப்பினும், நீர்வீழ்ச்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சின்னக்கல்லார் ஆற்றின் குறுக்கே உள்ள தூரிப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று குதித்து மகிழ்ந்தனர். இதேபோல் சோலையாறு அணையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வால்பாறைக்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், நகரில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தங்குவதற்கு விடுதி கிடைக்காமல், பலர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரவு பொழுதை கழித்து சென்றனர். வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வால்பாறையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.