ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் படகு சவாரி சென்று மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி,

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் படகு சவாரி சென்று மகிழ்ச்சியடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தனர். அதன் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அலங்கார வேலிகள், பசுமையான புல்வெளிகளில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

படகு சவாரி

ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகள், அதிவேக படகுகளில் சவாரி செய்தனர். தொடர் மழையால் பைக்காரா அணையின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் ஊட்டி ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. ஊட்டி படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், லவ்டேல் சந்திப்பு முதல் ஊட்டி மத்திய பஸ் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீ்ண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.


Next Story