ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி
புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை
கிறிஸ்மஸ் பண்டிகை, புத்தாண்டையொட்டி தொடர் விடுமுைற விடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ஊட்டியில் குவிந்து உள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். குழந்தைகள் கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அலங்கார செடிகள் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர்.
இதேபோல் படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏரியின் பின்னணியில் புகைப்படம் எடுத்தனர். மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் இதமான காலநிலையை அனுபவித்தபடி சவாரி செய்து மகிழ்ந்தனர். மிதி படகில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு இல்லம் முன்பு உள்ள வாகன நிறுத்துமிடம், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நிரம்பி வழிந்தது.
படகு சவாரி
ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கிய பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அங்கு மாதிரி சைக்கிளில் இருந்தபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா மலைச்சிகரம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு தண்ணீரை கிழித்து கொண்டு அதிவேகமாக செல்லும் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஊட்டிக்கு வரும் வழியில் வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதை, மலைகளை மோதி செல்லும் மேக கூட்டம் உள்பட இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.
ஊட்டி நகர், ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-கோத்தகிரி சாலைகள் மற்றும் ஊட்டி-கூடலூர் சாலையோரங்களில் வாகனங்களை அதிகளவில் நிறுத்தியதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் புத்தாண்டுக்காக நேற்று வந்தவர்களுக்கு ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை.
கோடநாடு காட்சிமுனை
இதேபோன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
மேலும் கோடநாடு காட்சி முனை உள்பட கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்ததை காண முடிந்தது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டதுடன், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி இருந்தது.