ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
வார விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா தலங்கள்
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூருக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். அதன்படி வார விடுமுறையான நேற்று ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏற்காட்டில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது. இரவில் குளிர்ச்சியான காற்று வீசியது. இதன் காரணமாக நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டத்தை சுற்றிப்பார்த்த அவர்கள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.
விற்பனை படுஜோர்
தொடர்ந்து ஐந்திணை பூங்கா, பக்கோடா காட்சி முனை, ஜென்ஸ் சீட், லேடிஸ் சீட், சேர்வராயன் குகை கோவில் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை படுஜோராக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள், அணை, பூங்காவை சுற்றிப்பார்த்தனர். மேலும் அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்தில் இருந்து அணையின் அழகை கண்டு ரசித்தனர்.
உற்சாக குளியல்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் முனியப்பன் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் அணை பூங்காவில் சீசா, ஊஞ்சால் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி, பொழுதை கழித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மீன் கடைகள், மீன் வறுவல் கடைகளில் விற்பனை களைகட்டியது. பூங்கா மற்றும் பவளவிழா கோபுரம் ஆகிய இடங்களில் நேற்று ஒரே நாளில் நுழைவு கட்டணமாக ரூ.45 ஆயிரத்து 100 வசூலானது.