விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!


விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
x
தினத்தந்தி 5 Nov 2023 1:24 PM IST (Updated: 5 Nov 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

அதே போல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணி கள் நீண்ட வரிசையில் காத்து நின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டா ரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story