ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆடி பண்டிகை, விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
படகு இல்லம்
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று ஆடி பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் சென்று ரசித்தனர். குறிப்பாக ஏராளமானவர்கள் ஸ்கை பாங்கில் சாகச விளையாட்டை விளையாடினர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர்.
அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முனியப்பன் கோவில்
இதேபோல் மேட்டூருக்கு ஆடி பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சில பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து தாங்கள் சமைத்த உணவினை பூங்காவிற்கு எடுத்து சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து சாப்பிட்டனர். சிறுவர், சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.86 ஆயிரத்து 100 வசூலானது.
ஒரு சிலர் அணையின் வலதுகரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகிய தோற்றத்தை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மேட்டூர் பூங்கா மற்றும் முனியப்பன் கோவில் பகுதிகளில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. இதற்கிடையே அணை பூங்காவிற்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் தின்பண்ட கடைகள், சிறிய விளையாட்டு சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் என ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் விற்பனையும் களைகட்டியது.