வரையாடுகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள்


வரையாடுகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரையாடு

தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, அழிந்து வரும் விலங்கின பட்டியலில் உள்ளது. இதை பாதுகாக்க ரூ.25 கோடியே 14 லட்சம் செலவில் புதிய திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

நீலகிரி தவிர கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியிலும் வரையாடு அதிகளவில் வாழ்ந்து வருகிறது. தற்போது பருவமழை முடிந்து வெயில் காலம் தொங்கியுள்ளதால், சாலையோர புற்களை மேய வரையாடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இவை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 1-வது கொண்டை ஊசி வளைவு முதல் 16-வது கொண்டை ஊசி வளைவு வரை உள்ள சாலையோர பகுதிகளில் நடமாடுவதை காண முடியும்.

துன்புறுத்தல்

இந்த நிலையில் கோவை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வேட்டை தடுப்பு காவலர்கள் மாலையில் பணி முடிந்து சென்ற பிறகு, அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் வரையாடுகளை துன்புறுத்தி வருகின்றனர். அவற்றின் கொம்புகளை பிடித்து இழுப்பது, வலுக்கட்டாயமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வைப்பது, காதுகளை பிடித்து இழுப்பது, கால்களை பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக வரையாடுகள் அச்சம் அடைந்து, ஆங்காங்கே ஓட்டம் பிடிக்கின்றன. இதனால் அவை விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதோடு தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் உள்ளது.

வாகனங்கள் நிறுத்த தடை

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரையாடுகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆங்காங்கே வனத்துறையினர் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். மேலும் வரையாடுகள் அதிகம் நடமாடும் 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை காட்சி மாடத்தை கூட மூடி வைத்து இருக்கின்றனர். இது தவிர வேட்டை தடுப்பு காவலர்களை கண்காணிப்பு பணிக்கு அமர்த்தியுள்ளனர். எனினும் அவர்கள் பணி முடிந்து சென்ற பிறகு வரையாடுகள் தொந்தரவு செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அழிந்து வரும் பட்டியலில் உள்ள மாநில விலங்கை காப்பாற்ற அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ள நேரத்தில், சுற்றுலா பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story