கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள்கூட்டம் அலைமோதியது


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள்கூட்டம் அலைமோதியது
x

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையொட்டி நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில்...

அதைதொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் உற்சாகத்துடன் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.

இதேபோல காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story